திங்கள், 14 மார்ச், 2011

இன்றும் புதிதாய் - 3

ஓம்  நமசிவய.


காதலுக்கு  கண்  இல்லை.

இது அடிக்கடி நாம் கேட்கும்  வார்த்தைதானே, ஆனால்  காதலுக்கு   நமது  அறிவையும்  முடக்கும்  சக்தி  இருக்கிறதா?  இந்தக் கேள்விக்கு  ஆம்  என்றுதான்  பதில்  சொல்ல வேண்டியிருக்கும் .

இன்றும்  கூட  பலர்  பல  கிறுக்குத்தனங்களை  காதலின்  பெயரால்  அரங்கேற்றுவது   வேடிக்கையாகத்தான்  இருக்கும்,  வேண்டுமானால்  நம் தமிழ் சினிமாவைப் பாருங்கள்.

காதலிக்காக  தியேட்டர்  வாசலில்  கால் கடுக்க நின்று  டிக்கட்  வாங்கும்  இளைஞன்  கால்வயிரோடு  இவனது  கஞ்சிக்காக  பாடுபடும்  பெற்றோருக்காக  ரேஷன்  கடையிலோ,  மின்கட்டணம்  கட்டவோ  நின்று இருப்பானா  என்றால்  இல்லை  என்று  சத்தியமே செய்து  விடலாம். அட  ஒரு அரைமணி  நேரம்  ஒரு  இன்டர்வியுவில்  காத்திருப்பானா?  ரொம்பக்  கஷ்டமான  காரியமல்லவா?

பதினெட்டு வருஷமாக  பொத்தி  பது காத்து  ஒரு  பெண்ணுக்கு  என்ன  தேவைகளோ  அவைகளை  வாங்கி  தந்த  பெற்றோரை  ஒருகணத்தில்  ஓரங்கட்டி விட்டு  ஒரு மாசம் மட்டும் பழகின  காதலனோடு  ஓடும்  கன்னிகள்  எத்தனை  பேர்  உள்ளனர்?

அதுவும்  இப்போது  எல்லாம்   எல். கே. ஜி  வகுப்பிலேயே  காதல்  வந்து விடுகிறது,  எல்லாம்  காலம் , வேறு   என்ன சொல்வது,

சினிமாவில்  மட்டுமில்லாது  நிஜ வாழ்விலும்  கூட  ஒரு பெண்ணை அடைய  சிலர்  எதையும்  செய்ய  தயாராக  உள்ளார்கள்.அதில்  ஒன்று  அறிவையும்  அடகு வைப்பது.

அந்த நேரத்திலே  அந்தப் பெண்ணின் அழகு  ஒன்றே  அவர்களின்  சிந்தையில் இருக்கும்.  மற்றதெல்லாம்  பிறகுதான்.

புலன்களின்பால் பெரும்  இன்பங்களிலே  உயரினங்கள்  பெரிதும்  விரும்புவது  பெண்ணின்பமே,  அதிலும்  மனித இனமோ அதற்காக  எதையும்  செய்ய  தயாராகிறது.  பல  சாம்ராஜியங்களே  பெண்களின் மேல்  கொண்ட  பற்றால்  அழிந்து உள்ளது.  ராமாயணம்,  மகா பாரதம் - இந்த  இரண்டு  இதிகாசங்களிலுமே  பெரும் திருப்பு முனையாக மாறியதன்  காரணமும்  பெண்களே.

இங்கே   நாம்  காணப்போவது  நகுஷன்  என்ற  மஹா  பாரத  பாத்திரம் எப்படி  புலனின்பமே  வேண்டாம்  என்று  அறவே  மறுத்து,  ஒரு மாபெரும்  தோல்வியை   தழுவி  சொர்கத்தின்  வாசலில் இருந்து  சர்ப்பமாகி  மீண்டும்  பூமியிலே  வீழ்ந்தானோ  அதற்க்கு  எதிராக  தன புலனின்பமே  பெரிது எனக் கருதிய  சாந்தனு  என்ற  மன்னனின்    கதையாகும்.

சாந்தனு  என்கிற  மன்னன்  ஒரு நாள்    வேட்டையாடும்  பொருட்டு  கானகம்  சென்றபோது  தண்ணீர்  தாகத்தினால்  கங்கை நதி  ஓரம்  நடக்கலானான் அப்போது  கங்கைக் கரையிலே  இது வரையிலும்  அவன்  காணாத  ஒரு பேரழகியை,  இந்த மண்ணிலே  பிறவாத  தேவலோகத்து  மங்கையோ  என்று  எண்ணி  வியக்கும்படியான  ஒரு  பெண்ணைக்  கண்டு  உடனடியாக  அவள் மீது  காதல்  கொண்டு ,  அந்த  பெண்ணிடமே  சென்று  " பெண்ணே  நான் உன்னை  திருமணம் செய்து கொள்ள  விரும்புகிறேன்,  நான்  இந்த நாட்டின்  மன்னன்  சாந்தனு  ஆவேன்,  என்ன சொல்கிறாய்? "  என்று  கேட்டும் விட்டான்.

அந்தப்  பெண்ணும்  ஒப்புக்கொள்ள ஒரு நிபந்தனை  ஒன்றை  சொன்னாள்

" அரசே,  தங்களை  மணமுடிக்க  எந்த ஒரு தயக்கமும்  எனக்கு  இல்லை,  ஆனால்  நான்  இந்த க்ஷணம்  முதல்  எந்த ஒரு காரியத்தையும்,  ஏன்,  நினைக்கவே  மனம் பதைக்கும்  செயலையும்  கூட  செய்ய  துணிவேன்,  ஆனால்  தாங்கள்  என்னிடம்  எந்த  காரணத்தையும்   கேட்பீர்களானால்  அந்த க்ஷணமே   தங்களிடம்  இருந்து  பிரிந்து  விடுவேன்,  சம்மதமா? "

மன்னனுக்கோ   அவள்  பேசுவது  புரிந்தாலும்,  அவனது  காதல்  அவன்  கண்ணை மறைத்தது,  சரி   என்று  சம்மதம்  தெரிவித்து  அவளையும்  உடன் அழைத்து  வந்து  திருமணம்  செய்து  கொண்டு அரண்மனையிலே  வாழும்  காலத்தில்தான்  அவன் கொஞ்சமும்  எதிர்பாராத  செய்தியை  பணிப்பெண்  வந்து சொன்னாள்

" அரசே  மகாராணியார்  ஒரு ஆண்  மகவைப் பெற்று  எடுத்து  அதனை  உடனடியாக   கொண்டு போய்  கங்கை  ஆற்றிலே  வீசிக்  கொன்று விட்டார்கள்"

அதிர்ந்து போய்  ராணியை   காண  அந்தப் புறம்  நோக்கி  நகர்ந்தவன்  மனதிலே   ராணியின்   நிபந்தனை   நினைவு  வர  அப்படியே  தளர்ந்து  ஆசனத்திலே அமர்ந்து  விட்டான், 

நாடாளும்  மன்னனாக  இருந்தும் கூட  சிசுக்கொலையை  நம்மால்  தடுக்க இயலாத  நிலையால்  மனம்  வெதும்பினான்   சாந்தனு,

அறிவு  வேலை செய்ய  வேண்டிய  நேரத்திலே  வேலை செய்யாது  போனால்  என்ன  துன்பம்  வரும்  என்று  நமக்கு  அறிவுறுத்துகிறது  சாந்தனு  மன்னனின்  இப்போதிய  துயரம்.

கங்கை  கரையிலே  பெண்ணைக்  கண்டு  காதல்  கொண்ட  சாந்தனு  மன்னனுக்கு   அவனது  காதல்  மட்டுமே  உறுதியாக  இருந்தது,  அவனது  ஆசை   வேலை  செய்தது,  அறிவு அடங்கிப் போனது,   ஆம்,   அவனது  அறிவு  விழித்து  இருந்தால்,  என்ன செய்து  இருப்பான்?

பெண்ணே  நீ  நான்  விரும்பியவளாக  இருக்கலாம்,  இந்த  புவியிலே  எங்கும்  காணக்கிடைக்காத  பேரழகியாகவும்   இருக்கலாம்,  ஆனால்  நீ சொல்லும்  நிபந்தனைப்  படி  நீ செய்வது  நன்மையாகில்  நான்  ஒருபோதும்  மறுப்போமில்லை,   ஆனால்  துன்பங்கள் உன்னால்  வரும் எனில்  கேள்வி கேட்காமல்  இருப்பது  எப்படி  என்று   கேட்டிருப்பான்  அல்லவா?

அல்லது   இப்போதாவது  மன்னன்  சாந்தனு  ராணியிடம்   கண்டித்து இருக்கலாமே ?  அதையும்   அவன்  செய்ய  வில்லை,   காரணம்  அவனது  புலன் இச்சைதான். ராணியிடம்  அவனுக்குள்ள  மோகம்,  எங்கே   நாம் ஏதாவது  கேட்கப் போனால்  அவள் நம்மை விட்டு  அவள்  சென்று  விடுவாளோ?  என்ற  எண்ணத்தால்  தனது  புத்திர  சோகத்தையும்  அடக்கிக் கொண்டு விட்டான்.   ஆனால்  அது  இதோடு  நிற்க  வில்லை

ராணியானவள்   மேலும்  ஆறு   குழந்தைகளையும்   அப்படியே   கங்கையிலே  வீசி  விட்டாள்.  தனது எட்டாவது  சிசுவை  எப்படியாவது  காக்க  வேண்டும்  என்று   சாந்தனு மன்னன்  ஒரு பணிப் பெண் மூலமாக  குழந்தையை  கடத்தி வந்து விட்டான் .

ஒரு  நொடியிலே  ஒரு பெண்ணின்  அழகால்  கவரப்  பட்டு,  அவளது  அழகுக்கு,  தனது  புலன் இச்சைக்கு,  அடிமையான  காரணத்தால்  தனக்கு  பிறந்த  ஏழு    ஆண் குழந்தைகளை,  தனது  வம்சக் கொழுந்துகளை  இழந்து  புத்திர சோகத்திலே  வீழ்ந்து  வீழ்ந்து  மீண்டு இருக்கிறான்.
இதற்கெல்லாம்  காரணம்  கண்மூடித்தனமான  மோகம்,  ஆசை,  புலனடக்கமின்மை.

ஆனால்  இவனையே  கணவனாக  அடையவே  அந்தப் பெண்  அங்கே  உலவிக் கொண்டு  இருந்தாள்,  அவள் யார்  என்று  பின்னர்  காண்போம்.

சந்தனுவினால்  தற்போது  நாம்  பெற்ற  நீதி  ஆசை  எவ்வளவு  அடைவதானாலும்  அது  அறிவிற்கு  உட்பட்டதாகவே  இருக்க வேண்டும்.  அங்கே  அறிவு  வேலை செய்ய  வேண்டும்  என்று  நமக்கு  மகா பாரதம்  உணர்த்துகிறது.  அதற்க்கு  இன்றும்  பதிய  உதாரணங்கள்  இருக்கிறது.